சென்னைக்கு அருகில் ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள புலிகாட் ஏரி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர்நிலையாக ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பறவைகளின் தாயகமாக இருக்கும் இந்த சரணாலயம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி செல்வதாக தெரிகிறது. இதற்காக தமிழக அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன?
ஆபத்தில் உள்ளதா புலிகாட் ஏரி
புலிகாட் பறவைகள் சரணாலயத்தின் கணிசமான பகுதியை விலக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதிக்குள் அமைந்துள்ள 13 வருவாய் கிராமங்களில் உள்ள பட்டா நிலம், 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் உரிமை கோரும் செயல்முறையை முடித்த பிறகு, சரணாலயத்தில் இருந்து விலக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன என்று ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளிவந்துள்ளது.
இரண்டு மாதங்களுக்குள் எழுத்துப்பூர்வ கோரிக்கை
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிப்ரவரி 29-ஆம் தேதி வரைவு அறிவிப்பை வெளியிட்டார். இரண்டு மாதங்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் நிலத்திற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை மக்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஏற்கனவே அதானி துறைமுகத்தினால் ஏரிக்கு அபாயம்
புலிகாட் பறவைகள் சரணாலயப் பகுதி குறைக்கப்படும்போது, அதன் வடக்கு எல்லை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கு (ESZ) வெளியே விழும், சர்ச்சைக்குரிய அதானி-காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான பெரும் தடைகளை இது நீக்கும் என்பதால், தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) அனுமதி பெறுவதில் இருந்து திட்டத்திற்கு விலக்கு அளிக்கலாம். காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்கம் மற்றும் பறவைகள் சரணாலயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், நூற்றுக்கணக்கான ஏக்கர் சதுப்பு நிலங்களை கையகப்படுத்துவது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.