வீட்டில் கண்ணாடி உடைந்தால், குங்குமம் சிதறினால் அபசகுனமா? சகுன சாஸ்திர விளக்கங்கள்!

கண்ணாடி உடைவது, விளக்கு அணைவது, வழிபாட்டுத் தேங்காய் அழுகலாக இருப்பது… எதிர்பாராமல் நிகழும் இவை போன்ற இன்னும்பல விஷயங்கள், நம்மை அதீத மனநெருடலுக்கு ஆளாக்கிவிடும். இவையெல்லாம் அபசகுனங்களா, இவற்றுக்குப் பரிகாரம் தேவையா… சகுன சாஸ்திரம் என்ன சொல்கிறது? தெரிந்துகொள்வோமா?!

சகுனங்கள் குறித்து பண்டைய நூல்களில் விளக்கப்பட்டுள்ளன.   ஒரு காரியத்தைத் தொடங்கும்போது நிகழும் சம்பவங்களை சகுன குறியீடுகளாக ஏற்றுச் செயல்பட்டிருக்கிறார்கள் முன்னோர்கள். அதேபோல் நிமித்தம் பார்க்கும் வழக்கமும் உண்டு. எதிர்பாராமல் நிகழ்வது சகுனம்; எதிர்பார்க்கும் விஷயங்கள் குறித்த பலனைக் குறிப்பால் உணர்த்துவது நிமித்தம் என்பார்கள். 

விளக்கு

தலைவனைப் பிரிந்த தலைவி அவனது வருகைக்காகக் காத்திருக்கிறாள். இந்நிலையில், அவளது பிரிவுத் துயரை போக்குவது போன்று நன்னிமித்தமாகப் பல்லி ஒலி எழுப்பியதாம். அது அவளுக்கு ஆறுதல் தந்தது. அகநானூற்றுப் பாடல்களில் ஒன்றில் இப்படியான தகவல் காணக் கிடைக்கிறது.

இப்படிப் பல்லி, பறவையினங்கள் மூலம் நிமித்தம் காணும் வழக்கம் இருந்துள்ளது. இதேபோல் `விரிச்சி கேட்டல்’,  `வேலன் கழங்கு குறிகேட்டல்’ ஆகிய வழக்கங்களும் நடைமுறையில் இருந்ததைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

சர்வார்த்த சிற்ப சிந்தாமணி எனும் நூலில் கடவுள் வாழ்த்தை அடுத்து சிற்பர் இலக்கணம் என்று சிற்பியின் தன்மைகளைக் குறித்தும், தொடர்ந்து சகுனங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய நாள்களில் மக்கள் தாங்கள் செய்யப்போகும் நிகழ்ச்சிகளைத் தொடங்கும் முன் குறிப்பாக திருமணத்துக்கும், வீடு கட்டுவதற்கு முன்பும் நாள் கோள் நோக்கியும், பல்வகை நிமித்தங்களை ஆராய்ந்தும் செயல்பட்டுள்ளனர். 

சகுனம் என்பது எதிர்பாராமல் நிகழ்வது; நிமித்தம் என்பது எதிர்பார்த்து பலனை அறிவது ஆகும்.

சகுனங்களின் வகைகளாக… மக்கள் வசிக்கும் இடங்களில் நிகழ்வது, காட்டில் நிகழ்வது, நீரில் நிகழ்வது, நிலத்தில் நிகழ்வது, வானில் நிகழ்வது, பகலில் நிகழ்வது, இரவில் நிகழ்வது என்றும் வகைப் பிரித்து பலன் கண்டனர். இத்தகைய சகுனங்களில் நல்லவையும் உண்டு தீயவையும் உண்டு. 

சுப சகுனங்கள்…

சுவர் பல்லியின் ஒலி, மனையின் உச்சியில் அமர்ந்து குயில் கூவுவது, புதரில் சூழ்ந்திருக்கும் வண்டுகள் ரீங்காரம் செய்வது, முன் கைவளையும் தோள் வளையும் இறுக்கம் அடைதல், ஆயர்களின் குழலோசை இவை யாவும் நல்ல சகுனங்களாகும்.

சிற்ப சாஸ்திரம் சில சகுனங்களைப் பற்றி விவரிக்கிறது. காக்கை இடமிருந்து வலமாக பறப்பது, பருந்து வலப்புறம் இருந்து இடப்புறமாக பறப்பது, இறைச்சியுடன் கூடிய கழுகு, பசு, தயிர் குடம், குழந்தையுடன் பெண், உணவுப் பொருள், சிவனடியார், ஜ்வாலையுடன் கூடிய நெருப்பு, நீர்க் குடம், அலங்கரிக்கப்பட்ட யானை ஆகிய விஷயங்களை நல்ல சகுனங்களாகக் குறிப்பிடுகிறது சிற்ப சாஸ்திரம்.

பல்லி

சங்கின் ஓலி சுப சகுனமாகும். பண்டைய காலங்களில் போர்க் காலங்களில் ஒலிக்கப்படும் சங்கின் ஒலி வெற்றி சப்தமாகவும் நல்ல சகுனமாகவும் கருதப்பட்டது. வீட்டில் உள்ள விருட்சம் பூத்தால் சுப சகுனமாகும். பேசிக் கொண்டிருக்கும் போது கெளளி எனப்படும் பல்லி இடும் சப்தம், அது எந்த திக்கிலிருந்து வந்தது என்பதைப் பொறுத்து சுப, அசுப பலன்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

அதேபோல் வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு ஆகியவற்றைப் பார்ப்பதும், அவற்றின் ஒலிகளைக்கேட்பதும் சிறப்பாகும்.

நாட்டியப் பெண்கள், தயிர், மஞ்சள் கலந்த அரிசி (அட்சதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னிப் பெண்கள், கருடன், ஆலய மணி ஓசை, விளக்கு, தாமரைப் பூ, நாய் தன் உடலை சிலிர்ப்பது, பசு மாடுகள் ஆகியவற்றைக் காண்பதும் சுப சகுனமாகும்.

அபசகுனங்கள் குறித்த விவரங்கள்…

எட்டு திசைகளில் ஒன்றில் எரிநட்சத்திரம் விழுவதைப் பார்த்தல், பெரிய மரம் ஒன்றின் இலைகள் இல்லாத கொம்பு தீப்பிடித்து எரிதல், அச்சம் விளைவிக்கும் கூகை போன்ற பறவைகளின் ஒலி, இரவு வானத்தில் தும்பிகள் ஒலியெழுப்புவது, வீட்டில் ஏற்றப்படும் விளக்கு எவ்வித காரணமும் இல்லாமல் அணைவது ஆகியன தீய சகுனங்களாகக் கருதப்பட்டன.

இவ்வாறு சகுனங்களாலும் நிமித்தங்களாலும் தீய பலன்கள் நடக்கும் என்பதை அறிந்தால், `படிமத்தான்’ எனப்படும் ஜோதிடரான வேலனை அழைத்து பரிகாரம் செய்துகொண்டனர்.

இனி நடைமுறையில் நிகழும் சம்பங்களை ஒட்டிய சகுனங்கள் பற்றி அறிவோம்.

கண்ணாடி உடைந்தால்…

கண்ணாடி எட்டு மங்கல பொருள்களில் ஒன்றாகும். அதை வைத்துப் பூஜிப்பது நம்முடைய மரபு. யாகசாலையில் இறைவனை வழிபடும் நேரத்தில் அவரைச் சுற்றி கண்ணாடி, சாமரம், தீபம் போன்ற எட்டு மங்கலப் பொருள்களை வைத்து, உலக மக்கள் அனை வரும் நலம் பெறவேண்டி வழிபடவேண்டும் என்று ஆகமங் கள் கட்டளையிட்டுள்ளன.

வீட்டிலுள்ள அனைவரும் நன்மை அடையவேண்டும் என்ற நோக்கத்தில், வீடுகளின் தலை வாயிலில் கண்ணாடி வைக்கப் படுகிறது. மேலும், நம் வீட்டிற்கு வருபவர்களில் எவரேனும் தவறான எண்ணத்துடன் வருவார்கள் எனில், அவருடைய பார்வை முதலில் இந்தக் கண்ணாடியில் படிவதன் மூலம், நம்மைப் பற்றிய அவருடைய தவறான எண்ணங்கள் போக்கப் பெற்று, நாம் காப்பாற்றப்படுவோம் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

சில தருணங்களில் எதிர்பாராத விதமாகக் கண்ணாடி உடைந்து போகும். அதன் பொருட்டு மனநெருடல் தேவையில்லை. உலகிலுள்ள அனைத்துமே காலத்துக்குக் கட்டுப்பட்டவை. சில பொருள்கள் எவ்வளவு விலையுயர்ந்ததாக இருந்தாலும், அதனுடைய காலம் முடிந்துவிட்டது என்றால் நம்மால் பாதுகாக்க முடியாது. தங்கள் வீட்டில் நிலைக்கண்ணாடி உடைந்து விட்டது, அதற்கு உரியகாலம் முடிந்துவிட்டது என்பதற்கான அடை யாளம்தான். ஆகவே, கடவுளை பிரார்த்தித்துக்கொண்டு வேறு கண்ணாடி மாற்றிவிடவேண்டும். கவலைப்படத் தேவையில்லை.

தேங்காய்

தேங்காய் அழுகிப்போயிருந்தால்…

தேங்காய் உடைக்கும்போது தேங்காய் சரியாக உடையாமல் இருக்கலாம் அல்லது அழுகி இருக்கலாம். இதன்பொருட்டு வீண் சஞ்சலம் தேவையில்லை. வேறுதேங்காயைப் பயன்படுத்தி வழிபடலாம்; அதேபோல் ஆலயத்தில் உடைக்கும் தேங்காய்க்கும் சகுனம் பார்க்கத் தேவையில்லை. அதேபோல், நாம் அர்ச்சனைக்குக் கொடுத்த தட்டு மாறி வந்தால், அதை நாம் அபசகுனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

விளக்கு அணைவது நல்லதா?

காற்றில் விளக்கு அணைவதும் வேறு ஏதேனும் சலனங்களால் விளக்கு விழுவதும் அதனால் தீபம் அணைவதும் சகுனத் தடை ஆகாது. ஏதேனும் காரணங்களால் ஏற்படும் இப்படியான தடங்கல்களை சகுனமாகக் கருதத் தேவையில்லை. மீண்டும் விளக்கேற்றி வைத்து தெய்வத்தை மனதார வழிபடலாம்.

குங்குமம் சிதறினால்…

கவனப் பிசகால் நிலை தடுமாறுவோம் அப்போது கையில் இருக்கும் குங்குமம் கீழே விழுந்து சிதறும். விளையாடும் குழந்தைகள்  குங்குமச் சிமிழைத் தட்டிவிட்டு விடுவார்கள். ஆகவே, இதன் பொருட்டும் மனச் சஞ்சலம் தேவையில்லை. 

தாலி

நிலையில் தலை இடித்துக்கொண்டால்…

ஏதோ ஒரு காரியமாக அவசரமாக வெளியே கிளம்புகிறோம். அவசரத்தில் நிலைப்படியைக் கவனிக்கத் தவறுவது இயல்பு. சட்டென்று தலையில் இடித்துக்கொள்வோம். அதேபோல், அவசரத்தில் காலை எதிலாது இடித்துக்கொள்வோம்.

 உடனே வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சற்று அமர்ந்து பதற்றத்தைத் தணிக்கலாம். சிறிது தண்ணீர் குடித்துவிட்டு, குலதெய்வத்தை மனதார வணங்கிவிட்டுப் புறப்பட லாம். தெய்வத் துணை நம்மைக் காத்து நிற்கும்.

தாலியும் சகுனமும்

பெண்கள் சிலருக்கு எதிர்பாராத விதமாக தாலி கழன்று விழுந்து விடும். சில நேரம் தாலிச்சங்கிலி பழுதுபடுவதாலோ, தாலிக் கயிறு பழசாகிவிடுவதன் காரணமாகவோ அறுந்துவிடும். இதனால் அதீத பதற்றத்துக்கு ஆளாகிவிடுவார்கள். பதறவோ, சஞ்சலமோ தேவை இல்லை என்பதே சோதிடர்களின் கூற்று.

செவ்வாய் மற்றும் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில், பகல்வேளையில் தாராளமாக மாற்றிக் கொள்ளலாம். எதிர்பாராமல் நூல் அறுந்துவிட்டது எனில், அப்போது நேரம் காலம் பார்க்காமல், உடனே மாற்றிக்கொள்வது சிறப்பு.

அன்றாட நடவடிக்கைகள், பணிகள், வழிபாடுகள் போன்றவற்றில் சகுனம் குறித்த சிந்தனைகளைப் புகுத்தத் தேவை இல்லை. எந்தச் செயலைத் தொடங்கும்போதும் உங்கள் குலதெய்வத்துக்கு தீபம் ஏற்றி வைத்து, பூ சமர்ப்பித்து வழிபட்டு விட்டுத் தொடங்குங்கள், அந்தக் காரியம் நிச்சயம் வெற்றியாகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *